கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளதாகவும் பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை எனவும் புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து டாஸ்மாக் கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தொட்டியம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.