டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்து சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் அரசு டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கதவை உடைத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து விட்டு தப்பினர். இது குறித்து காவல் நிலையத்தில் டாஸ்மாக் கடையின் மேலாளர் தவமணி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சாபாளையம் மதுபான கடை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் செங்கதுரை பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பதும், காக்காபாளையம் டாஸ்மாக் மதுபானக் கடையில் 3 பேருடன் இணைந்து மதுபாட்டில்களை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் சக்திவேலை கைது செய்ததோடு, மீதமுள்ள 3 குற்றவாளிகளையும் வலை வீசி தேடி வருகின்றனர்.