மதுக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதில் எந்த ஒரு பொது நலனும் இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் அன்னை சத்யா நகரில் இருக்கும் மறுவாழ்வு மையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘டாஸ்மாக் கடைகளின் வருவாயில் நலத்திட்ட உதவிகள் செய்தாலும் மதுக்கடைகள் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை.
டாஸ்மாக் கடைகளில் கூட்டம், தனி மனித இடைவெளியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? மதுபாட்டிலில் குறிப்பிட்டுள்ள விலைக்குதான் விற்கப்படுகிறதா?’’ என்று நீதிபதிகள் சில கேள்விகள் எழுப்பினர். அதன்பின் வழக்கை வருகின்ற செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.