காரில் பயணித்தவர்கள் தவறவிட்ட 40 பவுன் நகையை நேர்மையாக போலீசாரிடம் கார் டிரைவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ரோடு பகுதியில் பாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் காரை ஓட்டிய போது, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் இருந்து ஒரு மூதாட்டி, ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் என நான்கு பேர் அவரது காரில் ஏறி உள்ளனர். அவர்கள் கோயம்புத்தூர் நீதிமன்றம் முன்பு உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியதால் பாபி அவர்களை அங்கு இறக்கிவிட்டார். இதனையடுத்து பாபியின் செல்போன் எண்ணிற்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு சிறிது நேரத்திற்கு முன்பு நாங்கள் உங்கள் காரில் வந்தோம் என்று கூறி காரின் டிக்கியில் ஒரு பேக்கை தவற விட்டதை தெரிவித்துள்ளார்.
அதன்பின் அவர் டிக்கியை திறந்து பார்த்தபோது அதில் கருப்பு நிற பேக் இருந்துள்ளது. இதனையடுத்து பாபி அவரிடம் அந்த பேக்கிங் நிறம் என்ன அதில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு அந்த நபர் சரியாக பதில் கூறாததால் பாபிக்கு அவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனால் அந்த பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகைகள் இருந்ததை கண்ட பாபி உடனடியாக அந்த பேக்கை ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதாவிடம் ஒப்படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் டாக்சி டிரைவரிடம் அந்த செல்போன் எண்ணை பெற்று கொண்டு அதற்கு தொடர்பு கொண்டு பையை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
அதன்பின் அந்த மூதாட்டி, ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகிய மூன்று பேரும் வந்தனர். ஆனால் செல்போனில் பேசிய அந்த நபர் தாமதமாக வந்துள்ளார். அவரை பார்த்த பிறகுதான் டாக்சி டிரைவர் காரில் வந்தவர்கள் இவர்கள் தான் என்று போலீசாரிடம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன் பின் சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகைகளை இன்ஸ்பெக்டர் அவர்களிடம் ஒப்படைத்து உள்ளார். இவ்வாறு நேர்மையான 40 பவுன் நகைகளை ஒப்படைத்த டாக்சி டிரைவரை அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.