தொடர்ந்து மழை பெய்வதால் பச்சை தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஜூன் மாதத்தில் மழை அதிகமாக காணப்படும். ஆனால் இந்த வருடத்தில் பருவமழை சரியாக பொழியவில்லை. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நாடுகாணி போன்ற பகுதிகளில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் குளிர், தொடர் மழை போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தொழிலாளர்கள் தேயிலை பறிக்க சென்றபோதும் மழையின் காரணமாக பணியினை சரிவர செய்ய இயலவில்லை. மேலும் கூடலூர் பகுதியில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் இஞ்சி, குறுமிளகு போன்ற பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மோசமான காலநிலையால் தேயிலை பறிக்கும் வேலையும் சரியாக செய்ய இயலவில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.