சென்னை: முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு ஜனவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நவம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தேர்வர்களின் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டன.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விபரங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தேர்வர்கள் உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது. தேவையான கல்வித் தகுதி பெறாதவர்கள் மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்கள் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமும் தகவல் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியற்றவர் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்முறையாக கம்ப்யூட்டர் மூலம் ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வினை 26 ஆயிரத்து 882 பேர் எழுதினர். அவர்களுக்கான உத்தேச விடை குறிப்புகள் ஜூலை மாதம் 29ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த தேர்வு முடிவு மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 814 கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.