உள்ளூரில் வசித்து வரும் ஆசிரியைக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குளம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் அதே ஊரில் வசித்து வரும் ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணியிடத்தில் திசையன்விளை பகுதியில் வசித்து வரும் மற்றொரு ஆசிரியைக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு வேறு ஒரு ஆசிரியை பணியில் சேருவதை கிராம மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் திசையன்விளை பகுதியில் வசிக்கும் ஆசிரியை தனக்கு முறையான பணி நியமன ஆணை இருக்கின்றது என கூறி அந்த பள்ளியில் சேர வந்துள்ளார்.
இதனையடுத்து உள்ளூரில் வசித்துவரும் ஆசிரியைக்கு பணியிடம் வழங்க வேண்டும் என பள்ளியின் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, புதிதாக சேர்ந்த ஆசிரியை கையெழுத்திடுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு புதிதாக சேர வந்த ஆசிரியையிடம் முறையான பணி ஆணையை வாங்கிக்கொண்டு பள்ளியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.