Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நாங்கள் இலவச பேருந்துகள் கேட்கவில்லை”…. தலையில் ரத்தம் வழிந்த நிலையில் ஆசிரியை பேசும் வீடியோ வைரல்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கு என இலவச அரசு பேருந்து சேவை இயங்கி வருகிறது. அதனை பெண்கள் அடையாளம் காணும் வகையில் தனி நிறத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் கண்டக்டர்கள் இலவச பயணம் என்பதால் பெண்களை மதிப்பதில்லை, பேருந்து நிறுத்தங்களில் நிற்பதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து புலியிறங்கி பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் சென்று நின்றதால் தனியார் பள்ளி ஆசிரியரான மேரி கிளாடிஸ் என்பவர் ஓடி சென்று படிக்கட்டில் கால் வைத்துள்ளார். அப்போது ஓட்டுநர் திடீரென பேருந்தை இயக்கியதால் மேரி தவறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆசிரியையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

ஆனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில், மேரி கோபத்தில் “நாங்கள் இலவச பேருந்து கேட்கவில்லை; பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. நிறுத்தத்தை தாண்டி நின்ற பேருந்தில் ஏற முயன்ற போது தான் எனக்கு உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டது” என கூறி சம்பந்தப்பட்ட பணிமனையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருவட்டார் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆசிரியை ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |