ஓய்வு பெற்ற ஆசிரியரிடமிருந்து 4 வாலிபர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 2 முறை தலா 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். இதனை அடுத்து 3-வது முறையாக முயற்சி செய்யும் போது ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வராததால் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் பணம் எடுத்து தருமாறு ராஜு கேட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த வாலிபர் ராஜுவின் ஏ.டி.எம் கார்டுக்கு பதிலாக தனது ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் செலுத்தி ரகசிய எண்ணை உள்ளிட்டு செய்ததால் தவறான எண் என காண்பித்துள்ளது. இதனால் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக நினைத்து ராஜு தனது ஏ.டி.எம் கார்டை வாங்கி விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு ராஜுவின் வங்கி கணக்கில் இருந்து 49 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜு ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏ.டி.எம் மையத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பணத்தை எடுத்தது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக மேல் கூடலூர் பகுதியில் வசிக்கும் கபில், அவரது நண்பர்களான ஆகாஷ், ஹரிஷ், ஸ்டாலின் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோசடி செய்த பணத்தில் துணி மற்றும் நகைக் கடைகளுக்கு சென்று விருப்பமானவற்றை வாங்கியது தெரியவந்துள்ளது.