அரசு பள்ளி வகுப்பறையில் பட்டியலின மாணவரை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் எஸ்.சி, எஸ்.டி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்ற சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த வீரசாமி என்பவரது ஏழு வயது மகனை, பள்ளி வகுப்பறையில் மலம் கழித்த மற்றொரு மாணவனின் கழிவை பட்டியலின மாணவனை பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என்பவர் சுத்தம் செய்ய வைத்துள்ளார்.
இது தொடர்பாக மாணவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக நாமக்கல் எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ஆசிரியை விஜயலட்சுமி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து ஆசிரியையைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை முடிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டார்.