பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டமநல்லூர் என்னும் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்மந்தாங்கல் என்னும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை திடீரென ஒரு விவசாய நிலத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் அண்ணாமலையின் சட்டைப் பையில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றி விசாரித்துள்ளனர். அந்த கடிதத்தில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதற்காக வெங்கடேசன், ஸ்ரீராமுலு, ராஜாராமன், பாரதி ஆகியோரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த இயலாததால் கடன் கொடுத்தவர்கள் திருமண மண்டபத்தை எழுதி தரும்படி அண்ணாமலையை மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை தற்கொலை செய்து கொள்ளபோவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இது குறித்து ஸ்ரீராமுலு, பாரதி, வெங்கடேசன், ராஜாராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அண்ணாமலையின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.