Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை எவ்வாறு தடுப்பது – ஆசிரியர்களுக்கு பயிற்சி..!!

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்போது அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்று சென்னையில் நடந்த பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் ஏற்படும்போது ஆசிரியர்கள் அதனை சட்ட ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று  நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு விளக்கங்களை அளித்தனர். குறிப்பாக குழந்தைகளிடம் நல்ல முறையில் தொடுதல் ( குட் டச் ), தவறான முறையில் தொடுதல் ( பேட் டச் ) மற்றும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் நோக்கோடு செயல்படுதல் உள்ளிட்டவை குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

ஆசிரியர்கள்தான் குழந்தைகளுக்கு தாய், தந்தையர் போல் இருக்க வேண்டும் என்பதால், குழந்தைகள் பாதுகாப்பிற்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் போக்சோ சட்டம் குறித்து படித்து தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமென்றும் அப்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாணவர்கள் பெற்றோருக்கு அடுத்தபடியாக அதிக நேரத்தை ஆசிரியர்களுடன்தான் செலவிடுகிறார்கள் என்பதால், இதுபோன்ற சூழ்நிலையில், துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தையை எவ்வாறு கையாள வேண்டும், அது தொடர்பாக காவல் துறையினருக்கு எவ்வாறு புகாரளிக்க வேண்டும் என்பவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க, அவர்களை எவ்வாறு அறிவுறுத்த வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எடுத்துக் கூறினர். வரும் காலங்களில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்கள் மற்றும் பகுதிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |