வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.மேலும் பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என மொத்தம் 22 லட்சத்து 43 ஆயிரம் பேர் பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு இ பாஸ் மற்றும் சிறப்பு மாணவர்களுக்கு பேருந்து வசதிகளும் செய்யபட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.