Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : காயத்தால் விலகிய பும்ராவுக்கு பதில் இவர் தான் ஆடுவார்…. பிசிசிஐ அறிவிப்பு..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. இதையடுத்து பும்ரா குணமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் 2 டி20 போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த போட்டியில் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதுகில் ஏற்பட்ட காயமானது முழுமையாக குணமடையவில்லை என்பதால் மீண்டும் அவர் ஓய்வுக்கு செல்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதாவது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 – 6 மாதங்கள் வரை பும்ராவால் விளையாட முடியாத காரணத்தால் தென்னாப்பிரிக்க டி20 தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். காயம் காரணமாக பும்ரா விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பும்ரா முதுகில் காயம் அடைந்து தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக யார் என்பதை பிசிசிஐ அறிவிக்கவில்லை..

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது, முகமது சிராஜ்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி அக்., 2ஆம் தேதி கவுகாத்தியிலும், 3ஆவது டி20 போட்டி 4ஆம் தேதி இந்தூரிலும் நடைபெற உள்ளது. தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |