ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத்திற்கு சென்ற விமானம் திடீரென்று அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரத்திலிருந்து இண்டிகோ விமான நிறுவனத்தினுடைய பயணிகள் விமானமானது, ஐதராபாத்திற்கு புறப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமான தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்ததால், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.
தற்போது அந்த விமானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். சமீப நாட்களில் ஒரு இந்திய விமானம் கராச்சியில் இரண்டாம் முறையாக தரையிறக்கப்படுகிறது. இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த விமானத்தின் தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டவுடன் விமானி உடனடியாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் தரையிறக்கி விட்டார். அந்த விமானத்தின் பயணிகளை ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்ல மற்றொரு விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.