பிரிட்டனில் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பொய் சொல்ல வைப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை சில அறிகுறிகளை தான் ஒரு கொரோனா அறிகுறியாக தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனாவின் அறிகுறிகள் நாளுக்கு நாள் வேறு பட்டு கொண்டிருக்கிறது.
ஏனென்றால் சமீபத்தில் கொரோனா நோயாளிகள் சிலருக்கு நாவு மற்றும் வாய்ப்பகுதியில் புண்கள் ஏற்பட்டு புதிய அறிகுறிகளை காட்டி வந்துள்ளது. இந்நிலையில் குடும்ப நல மருத்துவரான டாக்டர் அலெக்ஸ் சோஹல், மூக்கில் நீர் வடிதல், தொண்டை அலர்ஜி, தொண்டை கரகரப்பு, உடல் வலி, சோர்வு மற்றும் தலைவலி போன்ற காரணங்களால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் கொரோனா இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
ஆனால் இந்த அறிகுறிகளை தேசிய மருத்துவ சேவை கொரோனா அறிகுறியாக எடுத்து பரிசோதனை செய்யாது. ஆகையால் மருத்துவர் அலெக்ஸ் தன்னிடம் வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனை செய்ய வைப்பதற்கு காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு என்ற அறிகுறிகள் இருப்பதாக பொய் சொல்ல சொல்வதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபற்றி அவர் கூறியதாவது, பிரிட்டனில் கொரோனா அறிகுறிகளாக முடிவு செய்திருக்கும் பட்டியலை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவருக்கும் பரிசோதனையை செய்ய வேண்டும். அப்போதுதான் பழைய நிலைமைக்கு திரும்ப முடியும். இல்லையென்றால் நாடு முழுவதும் கொரோனா மேலும் பரவ தான் செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அலெக்ஸ் தலைமையிலான 140 மருத்துவர்கள் குழு சுகாதாரத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் புதிதாக தெரியவரும் அறிகுறிகளையும் கொரோனா அறிகுறியின் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.