தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் 500 கோவில்களைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியானது தொலைபேசி மூலம் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக 4.26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் பல ஆன்மீக நிகழ்ச்சிகள் திருப்பதி திருமலையில் நடத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு திருப்பதியில் உள்ள தேவஸ்தான ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார். இந்நிலையில் ரத சப்தமி அன்று சூரிய ஜெயந்தி உற்சவமானது வருகின்ற 19ஆம் தேதி திருமலையில் நடக்க உள்ளதால் ஏழு வாகனங்களில் அன்று காலை முதல் இரவு வரை ஏழுமலையான் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதனால் அன்றைய தினத்திற்கு டோக்கன்கள் மற்றும் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், திருமலையில் மாசி மாதம் காலை 6 மணி முதல் 6:40 மணி வரை விஷ்ணு புராணம் சொற்பொழிவு நடத்தப்படும் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் தேவஸ்தானம் சார்பில் 500 கோவில்கள் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் திருப்பதி செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி அறிவித்துள்ளார்.