திண்டுக்கல்லில் நத்தம் மாரியம்மன் கோவில் பூப்பல்லக்கு வீதி உலா சென்ற செவ்வாய்க்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவிலில் சென்ற மாதம் 15-ம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. அதற்கு மறுநாள் கன்னிமார்கள் தீர்த்தம் கொண்டு வந்து மஞ்சள் காப்புகள் கட்டி இரண்டு வாரங்கள் விரதம் இருந்துள்ளனர். இந்த விழாவையொட்டி தினம்தோறும் அம்மன் அன்னம், மயில், சிம்மம் போன்ற வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
இதனையடுத்து சென்ற செவ்வாய்க்கிழமை அன்று கோவிலின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற்றுள்ளது. விழாவில் அம்மனுக்கு கரும்பு தொட்டில், மாவிளக்கு, அரண்மனை பொங்கல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றியுள்ளனர். இந்த விழாவின் இறுதி நாளான செவ்வாய்கிழமை அன்று அம்மனுக்கு வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதில் பல இடங்களிலிருந்தும் வந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.