அரசு பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதால் தற்காலிக ஓட்டுனர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற இருப்பதால், அதற்காக சிறப்பு பேருந்துகள் பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சிக்கு ஆனைமலையில் இருந்து ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சீனிவாசபுரம் பகுதியில் இருக்கும் பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்தபோது, பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென கற்களை எடுத்து பேருந்து நோக்கி வீசியுள்ளனர்.
இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறி விட்டது. அதன் பிறகு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு கற்களை கொண்டு தாக்கியதால் தற்காலிக டிரைவரான அலங்கடவை பகுதியில் வசித்து வரும் அருண் என்பவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் அருண் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.