பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபாலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் டாக்டர் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். 77 வயதான இவரை அனைவரும் “பத்து ரூபாய் டாக்டர்” என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அதாவது 1966 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு மன்னார்குடியை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்துள்ளார். அதன்பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் பட்டம் பெற்ற பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணி புரிந்துள்ளார். இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2002ஆம் ஆண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் மருத்துவ பேராசிரியராகவும், பிரபல அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றிய இவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் 1969ஆம் ஆண்டு ஒரு கிளினிக்கை தொடங்கி இரண்டு ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து 1976ஆம் ஆண்டு முதல் பொதுமக்களாகவே பத்து ரூபாய் கொடுத்து இவரிடம் மருத்துவம் பார்த்து சென்றுள்ளனர். இந்நிலையில் மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த டாக்டர் கோபாலன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இவ்வாறு பொதுமக்களின் நலனுக்காக பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபாலன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.