Categories
Uncategorized

“டெண்டரே நடக்கல.. முறைகேடு எப்படி நடந்திருக்கும்”… கேள்வி எழுப்பிய கோர்ட், வழக்கை வாபஸ் பெற்ற திமுக!!

தஞ்சை மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு என ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கை, ஆர்.எஸ் பாரதி வாபஸ் பெற்றுள்ளார்.

வழக்கின் விவரம்:

நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்க முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 462 கி.மீ சாலைகள் விரிவாக்கத்திற்கு சாலைகள் அமைப்பதற்காகவும், சுமார் ரூ.1165 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டருக்கு உரிய முறையில் பரீசிலிக்காமல் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஒப்பந்தத்தை தாண்டி அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். எனவே இத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறையில் தாம் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபொழுது தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஏற்கனவே டெண்டர் ஒப்பந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த ஒன்றாம் தேதி திறக்கப்பட்டதாகவும், மேலும் அந்த டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை என்றும் கூறியிருந்தார். யாரும் பங்கேற்காத டெண்டரில் முறைகேடு எவ்வாறு நடந்திருக்கும் என வாதிட்டார். இந்த குற்றசாட்டு அர்த்தமற்றது என்றும் அரசியல் காரணங்களுக்காகவே இந்த புகார்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் வாதிட்டார்.

அதேபோல, லஞ்சஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து, அந்த தகவல்கள் மனுதாரருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி டெண்டர் நடைபெறாத பொழுது எவ்வாறு முறைகேடு நடைபெற்றிருக்கும் என்றுகூறி வழக்கை வாபஸ் பெறுவதுதான் சிறந்தது என நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மேலும் சில விவரங்களை இன்று தெரிவிப்பதாக ஆர்.எஸ்,பாரதி தரப்பில் கூறப்பட்டது.

அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது, டெண்டர் நடவடிக்கை தொடர்பான அனைத்து விசாரணையும் லஞ்சஒழிப்புத்துறை சார்பில் நடத்தப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இந்த புகார் விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்டது என வாதிட்டார். இதையடுத்து முதல்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை வாபஸ் பெற உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |