டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிகளில் 700 பணியாளர்கள் ஈடுபடுவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. எனவே ஜூலை முதல் மூன்று மாதங்கள் மழைக்காலங்கள் என்பதனால் தேங்கி நிற்கும் மழை நீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆக வாய்ப்பு இருப்பதனால் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இதற்காக 60 வார்டில் 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீர்த் தொட்டியில் கொசு உற்பத்தியாவதை தடுக்க பணியாளர்கள் அபேட் கரைசலை ஊற்றுகின்றனர். இதேபோன்று கிராமப் பகுதிகளிலும் டெங்கு உற்பத்தியை தடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 400 பேர்நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வீடு மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணியாளர்கள் அறிவுறுத்தினர் . மேலும் தண்ணீர் தொட்டி, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண்பானை, தேங்காய் ஓடு போன்றவற்றில் மழை நீர் தேங்கினால் அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து அலட்சியமாக இருக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர். இவ்வாறு இந்த மாவட்டம் முழுவதிலும் இந்த பணிகளில் 700 பேர் ஈடுபடுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.