தென்காசி அருகே குழந்தைகளின் ஆபாசப்படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், அதனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்தவர்கள் என பலர் அதிரடியாக காவல்துறையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுரை சேர்ந்த முருகேசன் என்பவர் செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதையடுத்து முருகேசன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குழந்தைகளை தவறாக படமெடுப்பது, அதை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.