ஜெர்மன் நாட்டில் ரயில் நிலையம் ஒன்றின் அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள Donnersbergerbruecke என்ற ரயில் நிலையம் அருகே திடீரென நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது ரயில் நிலையத்திற்கு வெளியே கட்டுமான பணியின்போது நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டினால் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரயில் போக்குவரத்தானது குண்டுவெடிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் குண்டுவெடிப்பு நடந்த பகுதியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் அந்த பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையே உள்துறை அமைச்சர் joachim Herrmann இரண்டாம் உலகப்போரின் 250 கிலோ கிராம் எடை கொண்ட வான்வழி வெடிகுண்டு வெடித்துச் சிதறியதாகவும், அப்பகுதி முழுவதும் தற்போது தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.