ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அங்குள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கேனரி தீவுகளில் கடந்த 19-ஆம் தேதி 4.2 ரிக்டர் அளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தீவில் அமைந்துள்ள லா பால்மா எரிமலையும் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது. ஏற்கனவே அந்த எரிமலையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து எரிமலை குழம்பு வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 3.0 ரிக்டர் அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் லா பால்மாவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிமலையில் உள்ள பள்ளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததோடு எரிமலை சீற்றமும் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இதற்கிடையே “இன்னும் எரிமலை சீற்றம் முடியவில்லை. எவ்வளவு நேரம் இந்த எரிமலை சீற்றம் நீடிக்கும் என்றும் தெரியவில்லை. தற்போது இயற்கையின் கைகளில் நாங்கள் உள்ளோம்” என்று கேனரி தீவுகளின் பிராந்திய தலைவர் ஏங்கல் வெக்டர் கூறியுள்ளார். மேலும் இதுவரை எரிமலை குழம்பு பெரும்பாலான வீடுகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டிடங்கள், ஆயிரம் ஏக்கர் நிலம், 34 கிலோ மீட்டர் அளவிற்கு சாலைகள் உள்ளிட்டவற்றை அழித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய செயற்கைக்கோள் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.