நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
போகோஹராம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நைஜீரிய இராணுவம் பயங்கரவாதிகளை ஒடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி நைஜீரியாவில் உருவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பயங்கரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதோடு, அப்பாவி மக்களை கொன்று குவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு கோரோனியோ நகருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் அங்குள்ள கிராம மக்களின் மீது பயங்கர துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் பூட்டப்பட்ட வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டிற்குள் இருப்பவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேசமயம் பலரும் பலத்த காயம் அடைந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.