ஆப்கானிஸ்தானில் இராணுவ சோதனை சாவடியில், தலீபான்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சில நாட்களாக ராணுவத்தினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. எனவே தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள்.
அதேசமயத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தங்கள் வசப்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி பாக்லான் மாகாணத்தில் இருக்கும் ஜுக்லா மாவட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கத்தில் தலீபான்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜுக்லா மாவட்டத்தில் இருக்கும் ராணுவ சோதனை சாவடியில் நேற்று முன்தினம் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தியதால், இரண்டு தரப்பினருக்கும் இடையே இரவு முழுக்க மோதல் நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில், இராணுவ வீரர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் வீரர்கள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.