தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த செய்திகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் ரெய்டு, கைது, 5 வருடங்கள் தடை என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. இந்த கைது நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உளவு துறையில் இருந்து தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதாவது தீவிரவாதிகள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களுக்கு குறி வைத்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியமான 9 தலைவர்களுக்கு தற்போது கேரளா மற்றும் தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேற்று ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் காவல்துறையினர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். அப்போது நிபந்தனைகளின் அடிப்படையில் காவல்துறையினர் ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் தற்போது நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக மத்திய உளவுத்துறை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தகவலால் தற்போது பொதுமக்கள் மத்தியிலும் அச்சம் எழுந்துள்ளது.