சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவை காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்களை மருத்துவமனைகள் அரசிடம் தெரிவிக்க வேண்டும், வதந்திகளை கிளப்பி விடக்கூடாது என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனிடையே கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில் நுழைவாயில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் பரிசோதனை செய்யப்பட்டது.