Categories
உலக செய்திகள்

“அரசியலமைப்பு போராட்டம்” தொடரும் வன்முறை…. பிரபல நாட்டில் நீடிக்கும் பதற்றம்….!!

பாகிஸ்தானின் தடைசெய்யப்பட்ட அரசியலமைப்பு போராட்டத்தின்போது நடத்திய வன்முறையில் 3 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் தெக்ரி-இ-லெப்பைக் என்ற அரசியல் அமைப்பானது இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீன் ஹசன் ரிஸ்வி இருந்து வருகிறார். அந்நாட்டில் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று இந்த அமைப்பு கூறி வருகிறது. மேலும் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அமைப்பு வலியுறுத்தி வருகின்றது. இதன் சார்பாக நடைபெறும் போராட்டங்கள் பெரும்பாலானவை வன்முறையிலேயே முடிந்து விடுகிறது.

இதனிடையில் கடந்த வருடம் பிரான்ஸ் அரசிற்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்தே தெக்ரி-இ-லெப்பைக் அரசியல் அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. மேலும் அந்த அமைப்பின் தலைவரான ஹதீன் ஹசன் ரிஸ்வியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஹதீன் ஹசன் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரி தெக்ரி-இ-லெப்பைக் அமைப்பினர் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டத்தின் போது காவல்துறையினர் வைத்திருந்த சோதனைச்சாவடிகள் மீது அவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய தாக்குதலில் 3 காவல்துறையினர் பரிதாபமாக கொலை செய்யப்பட்டனர். இதனைதொடர்ந்து இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |