தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இதன் அருகாமையில் இவற்றின் தடுப்பனையும் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆழியாறு தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சூழல் நிறைந்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடைகளை மீறி பலர் அணையில் குளிப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை எதிரொலியாக தடுப்பனையில் அதிகம் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்கும் போது ஆபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நடந்து விடக்கூடாது என காவல்துறையினர் தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு தடுப்பு அமைப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, தடுப்பணையில் உயிரிழப்பை தடுக்க காவல்துறையினர் செய்து வரும் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றோம். இருப்பினும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பது அணைப்பகுதியில் தடுப்பு வழிகள் அமைத்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியும். மேலும் இதற்காக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் விரைவில் தடுப்பு வேலை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர்.