கொரோனா தொற்று பரவலின் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளில் ஜிம்பாப்வே அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாப்வேவில் மொத்த மக்கள் தொகை 15 மில்லியன் ஆகும். இந்த ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதுவரை 1.7 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 12 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சீனாவில் இருந்து தடுப்பூசிகள் வாங்குவதற்கு நிதி அளித்துள்ளதாக ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் மாங்க்வா கூறியுள்ளார். இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஜிம்பாப்வே அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களை வற்புறுத்தி தடுப்பூசியை செலுத்த போவதில்லை என்று ஜிம்பாப்வே அரசு கூறியுள்ளது. ஆனால் அரசு பணியில் இருப்பவர்கள் தங்கள் மற்றும் பிறரின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிலும் அந்நாட்டில் இரண்டு லட்சம் அரசு பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்கள். ஆகவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டாம் என ஆணை பிறப்பிக்க கூடும் என்று ஜிம்பாப்வே அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக இதுவரை ஜிம்பாப்வேவில் 1,25,671 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 4,439 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக ஜிம்பாப்வேவில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கப்படுவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜிம்பாப்வேவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.