தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரியாவில் தடுப்பூசி பெறாதவர்கள் நாட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்றும், ஜெர்மனியில் இலவச பரிசோதனை கொண்டு வர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி பெறாதவர்கள் கூட மிக சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் . இருப்பினும் இரவு விடுதிகள் மற்றும் அதிகம் பேர் கூடும் பொது இடங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஏப்ரலில் கூறியபடி, நாடு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது குறித்து பெடரல் அமைப்பு இன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு வயது வந்த அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் மட்டுமே நாடு பழைய நிலைக்குத் திரும்பும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக கருதப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் இனி தடுப்பூசி பெறாதவர்களுக்கு என கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உணவகங்கள், கடைகள், மதுபான விடுதிகள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.