திருப்பத்தூரில் 6 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருப்பதால் விரைவில் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மண்டபங்கள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் தடுப்பூசி முகாம்கள் கடந்த 2-ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு 5- ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறியபோது மாவட்டத்தில் தினந்தோறும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 50 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனால் 1 லட்சம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும் 30 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1,000 கோவேக்சின் தடுப்பூசியும் வந்துள்ளதால் தடுப்பூசி முகாம் விரைவில் துவங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். அப்போது மாவட்ட சுகாதார துணை இயக்குனர் செந்தில் அவருடன் இருந்தார்.