தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் முதற்கட்ட தடுப்பூசியை 2 லட்சத்து 75 ஆயிரத்து 164 நபர்கள் செலுத்தியுள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசியை 55 ஆயிரத்து 39 நபர்கள் செலுத்தி இருக்கின்றன. இவ்வாறு முதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசியை 3 லட்சத்து 30 ஆயிரத்து 203 பேர் செலுத்தியுள்ளனர். இதில் ஒரே நாளில் மட்டும் முதற்கட்ட தடுப்பூசியை 8 ஆயிரத்து 757 நபரும், 2-ம் கட்ட தடுப்பூசியை 1,123 நபரும் மொத்தம் 9 ஆயிரத்து 880 நபர்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் மாவட்டத்திற்கு காலை 10 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது.
இதனையடுத்து புதிதாக கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என 18 சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் அடிப்படையில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். தடுப்பூசி முகாம்களில் கூட்டம் அலைமோதலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் சென்று தங்களது டோக்கன்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த லிங்க் kumaricovidcare.in என்ற இணையதளத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
அதன்படி அந்த இணையத்தளத்தில் bookmyvaccine என்ற பட்டனை அழுத்தி பொதுமக்கள் தங்கள் டோக்கனை பதிவு செய்து கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் டோக்கன்களை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த டோக்கன் பதிவு நடைமுறை தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு மட்டும் பொருந்தும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். ஆனால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இந்த நடைமுறை தேவையில்லை என்றும் அங்கு எப்போதும் போல் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நாகர்கோவிலில் இன்று கோவிஷீல்டு முதல் கட்ட மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசி 3 இடங்களில் செலுத்தப்பட இருக்கின்றது. எனவே ஆன்லைன் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.