கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கான முகாம் நடந்தது. இதில் முதல்கட்ட முகாமில் 1 லட்சத்து 17 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்கள் கிராம ஊராட்சி பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி போன்ற இடங்களில் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து 2-வது கட்ட முகாமில் 35 ஆயிரத்து 400 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட 12 ஆயிரத்து 344 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த மாவட்டத்தில் 2-வது கட்ட முகாம் 782 இடங்களில் நடந்தது என கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், ஊராட்சி மன்றத் தலைவர்களும் அந்தந்த பகுதிகளில் செய்து வைத்திருந்தனர். அதன்படி அங்கன்வாடிகள், பள்ளிகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் ஒரே நாளன்று 47 ஆயிரத்து 744 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆகவே தற்போது வரை இந்த மாவட்டத்திற்கு வந்த தடுப்பூசிகள் தீர்ந்து விட்டதால் மீண்டும் வரும் என எதிர்பார்ப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.