கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முழுவதும் 15 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் என 1,356 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் நேரடியாகச் சென்று சீட்டு வழங்கினர். அதன்படி சேலம் அஸ்தம்பட்டி திருநகரில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மெகா தடுப்பூசி கண்காணிப்பு அதிகாரி கதிரவன் போன்றோர் சென்று மக்களுக்கு சீட்டுகளை கொடுத்துள்ளனர்.
இதேபோன்று சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் அலுவலர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி சீட்டுகளை மக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியபோது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஆகவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தானாகவே முன்வர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதற்காக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டு மொத்தம் 2 லட்சம் நபர்களுக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தடுப்பூசி சீட்டு கொடுக்கும் பணியின்போது உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், மண்டல உதவி ஆணையர் சரவணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் நளினி, ஜெமினி, மாநகர் நல அலுவலர் யோகநாதன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர். அதன்பின் வாழப்பாடி பேரூராட்சி மற்றும் முத்தம்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் பணிகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து கலெக்டர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.