தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்த சிறப்பு முகாம்களில் ஒரு பாட்டிலில் இருக்கும் மருந்தை 10 பேருக்கு செலுத்துவதற்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு முகாமில் ஒரு பாட்டிலில் இருக்கும் மருந்தை 11 அல்லது 12 பேருக்கு செலுத்துதல், மீதமிருக்கும் ஓரிரு பாட்டில் மருந்துகளை தனியார் மருத்துவமனையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறியபோது கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக செலுத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்கு வருகின்ற தடுப்பூசி மருந்துகள் பேஜ் நம்பர் போன்ற அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய உயர் அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கின்றனர். மேலும் தினசரி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி விவரம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துகிறது. எனவே தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.