ஊர்வலம் குறித்து தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியதில் அவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜியா நாட்டில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தை குறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரான அலெக்சாண்டர் லஷ்கராவா சென்றுள்ளர். இவர் PIRVELI என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சார்ந்தவர். இது குறித்து தகவல் சேகரிக்க சென்ற அவர் அங்குள்ள போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு பலத்த படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அவரின் சக செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த கொலையானது ஆளும் கட்சியை குறித்து விமர்சனங்கள் எழுப்பும் ஊடகங்களை பழிவாங்குவதற்காக நடத்தப்பட்டதாக ஜார்ஜியா செய்தியாளர்கள் குழு புகார் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அரசின் செய்தியாளர் சந்திப்பில் அலெக்சாண்டரின் படத்தை கையில் ஏந்தி செய்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைக்கு அதிபர் தான் காரணம் என்பதால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அலெக்சாண்டருக்கு நீதி கிடைப்பதற்காக 4 தொலைக்காட்சிகள் தங்களது ஒரு நாள் காட்சிகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.