கார் நிலைதடுமாறி டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் தாயாருடன் ஜவுளிக்கடை அதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு யசோதா என்ற மனைவி உள்ளார், இந்த தம்பதியினருக்கு ஹரிஹரன், கவுசிகா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி ராஜா, அவருடைய மனைவி யசோதா, மகன் ஹரிஹரன், மகள் கவுசிகா மற்றும் தாயார் சரோஜா ஆகியோர் ஒரே காரில் தம்மம்பட்டியில் இருந்து பழனி புறப்பட்டனர். அதன்பின் பழனி முருகனை சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து பழனியில் இருந்து சேலம் சேலத்திற்கு புறப்பட்டனர். அப்போது காரை ராஜா ஓட்டினார். அவரது தாய் சரோஜா காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். இதனையடுத்து பின்னிருக்கையில் யசோதா தனது குழந்தைகளுடன் உட்கார்ந்து இருந்தார். அப்போது தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி ராஜாவும், தாய் சரோஜாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யசோதா மற்றும் 2 குழந்தைகளை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் ராஜாவையும், சரோஜாவையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டேங்கர் லாரி ஓட்டுநரான கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார் பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்