காவல் நிலையம் முன்பு தாய்-மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தா.பழூர் கடைவீதியில் பழக்கடை நடத்தி நடத்தி வருகின்றார். இவருடைய கடைக்கு அருகில் மணி என்பவர் காய்கறி கடை நடத்தி வருவதனால் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர்களது கடைக்கு இடையில் உள்ள மண் சுவர் இடிந்து விழுவது போல் இருப்பதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று மணியிடம் ராஜசேகர் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனது இடத்தை ராஜசேகர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி சுவரை இடிப்பதற்கு மணி மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தில் ராஜசேகர் புகார் கொடுத்துள்ளார். எனவே இட பிரச்சனை என்பதனால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண காவல்துறையினர் ராஜசேகருக்கு அறிவுறுத்தியதாக தெரிகின்றது. இதனால் மனமுடைந்த ராஜசேகர் அவரது தாய் சத்யா இருவரும் காவல் நிலையம் முன்பு திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்ததும் பின் 2 பேரும் சாலையில் அமர்ந்து கொண்டு எழுந்துவர மறுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததால் தாய்- மகன் இருவரும் சாலையில் இருந்து எழுந்து சென்றுள்ளனர்.