இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகி வருகிறது. நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் நிலம்’. இவர் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருக்கிறார். தந்தை – மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை மூத்த இயக்குநர் ஐ.வி.சசியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அபிலாஷ் இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் அபிலாஷ் கூறியதாவது: உலகம் முழுதும் பறந்து விரிந்த இனம் தமிழ் இனம். பக்கத்து நாட்டில் உள்ள நம் சகோதரர்கள் தங்களது இடத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவான பின், அவர்களை அரவணைக்கும் இடமாக இருப்பது நம் தாய் நிலம்தான். அப்படி வருபவர்களை இங்குள்ள மக்களும், அதிகார வர்க்கமும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக அமைந்திருப்பதால், இந்தப் படத்துக்கு ‘தாய் நிலம்’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்.
போர் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டு செல்வதற்காக தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட, தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்துக்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் சொல்கிறது.
இந்தக் கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக்கொடி காட்டினாலும் கூட, வியாபார காரணங்களால் படத்தை தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இதையடுத்து பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் படத்தை தானே தயாரித்து, நடிக்க முன்வந்தார்.
‘தாய் நிலம்’ படத்தில் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது பத்து வயது மகள் நேஹா ஆகிய இருவருமே தந்தை – மகளாக நடித்துள்ளனர். படத்தில் இவர்கள் தவிர சமீபத்தில் மறைந்த நடிகர் பாலாசிங் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் திரை அனுபவம் கொண்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
மிகுந்த சிரமங்களுக்கிடையே தற்போது படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டது. சில காரணங்களால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் தென்காசி, கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்.
படத்தின் இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி எழுதியுள்ளனர். மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் “தாய் நிலம்” படத்துக்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக, பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.