தாய்லாந்து நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்லாந்து நாட்டின் யலா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அரசு அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதனால், அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்திருந்த மர்ம நபர் ஒருவன் தான் வைத்திருந்த கையெறி குண்டு ஒன்றை திடீரென அலுவலகத்திற்குள் தூக்கி வீசிச்சென்று விட்டான். அது பயங்கர சத்தத்துடன் வெடித்த சில நிமிடங்களில் அலுவலகத்திற்கு வெளியே வெடிகுண்டுகளால் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் பயங்கரமாக வெடித்து சிதறியது.
இந்த இரட்டை தாக்குதலில் அரசு அலுவலகம் அருகே இருந்த போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.