தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் தகவல் பற்றி இந்த தொகுப்பு
தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனம் ஆடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்தவகையில் தைப்பூசம் சிவனுக்குரிய நாளாகிறது. அதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனியில் மட்டும் முருகன் கோவிலில் இந்த விழா பிரசித்தமாகி விட்டது இதற்கு காரணம் என்ன தெரியுமா…
பழனிமலை அடிவாரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன் அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி உள்ளது. பிரதான வாசலும் கொடிமரமும் முருகன் எதிரில் உள்ளதால் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டனர்.
காலப்போக்கில் முருகன் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் தைப்பூச கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள் தகப்பன் சுவாமியான முருகனுக்கு முக்கியத்துவம் தந்து வழிபட்டனர். காலப்போக்கில் தைப்பூசத் திருநாள் முருகனுக்கும் உரியதாக மாறிவிட்டது.
தற்போதும் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். ஆனாலும் பக்தர்கள் மலை மேல் வீற்றிருக்கும் தண்டாயுதபாணி மீது கொண்ட பக்தியால் அங்கே குவிகின்றனர். இதுவே தைப்பூசம் எப்படி உருவானது என்பதற்கான காரணங்கள்.
ஏன் கொண்டாடப்படுகிறது
கிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர் இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்தராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகர ராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன் தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார்.
அன்று மகரத்தில் இருக்கும் சூரியனும் கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக் கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா அம்பிகை சிவகாமி கண்டுகளிக்க பரம்பொருளான சிவன் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசத்தில் சிவன் பார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர்.
நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும் அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதை பெறலாம் என்பதால் இந்த நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நினைத்தனர்.
அம்மையப்பர் ஆன சிவன் பார்வதி மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அந்தவகையில் பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூச நாளில் சிவபார்வதி முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.