நடிகர் அஜித்குமார் அர்ஜுனா விருது பெற்ற குற்றாலீஸ்வரனுடன் இணைந்து விளையாட்டு அகாடமி ஒன்றை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தல 60 என அழைக்கப்படும் புதிய படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்நிலையில், இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் வென்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதோடு இந்தியாவின் அர்ஜுனா விருதையும் பெற்ற குற்றாலீஸ்வரனை தனது வீட்டுக்கு அழைத்து அஜித் சந்தித்துள்ளார்.
அஜித்துடன் சந்தித்த நிகழ்வை குற்றாலீஸ்வரன் தனது ட்விட்டர் வலைதளத்தில் ‘கற்பனைக்கு எட்ட முடியாத சந்திப்பு என்றும் விளையாட்டு மேம்பாடு சம்பந்தமாக சில முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அஜித்குமார் குற்றாலீஸ்வரனுடன் இணைந்து விளையாட்டுத்துறை சம்பந்தமாக ஒரு அகாடமி அல்லது திட்டத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.