மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேலாரணி மதுரா தாங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளியப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசியும், சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தலைமையாசிரியர் காளியப்பனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்து மாற்று தலைமையாசிரியரை நியமனம் செய்து பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.