தலீபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றியதால் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அதில் நாட்டின் முக்கிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். இதனை அடுத்து தலைநகர் காபூலை கைப்பற்றும் நோக்கில் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் காபூலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அதனை ஆப்கானிஸ்தானின் ராணுவ படையினரால் தடுக்க முடியாமல் திணறி வந்தனர். இதனை அடுத்து இன்று தலீபான்கள் தலைநகரான காபூலில் நுழைந்தனர்.
ஆனால் அவர்கள் அமைதியான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தலைநகர் காபூலை கைவசப்படுத்திய தலீபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் முழுமையாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி பதவியேற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தலீபான்கள் நிபந்தனையற்ற அதிகாரத்தை அரசாங்கத்திடம் வழங்க முயன்றதால் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். குறிப்பாக அவர் இருக்கும் இடம் குறித்து எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை.