மழைப்பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யும் முடிவை ரத்து செய்துவிட்டு முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியானது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றது. இதனால் நேற்று மாலை கனமழையானது பெய்யத் தொடங்கியது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கனமழையானது விடிய விடிய பெய்தது. அதிலும் சென்னையில் உள்ள திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் போன்ற பகுதிகளில் கனமழையானது இடைவிடாமல் தொடர்ந்து பெய்துள்ளது.
இதனை தொடர்ந்து வட சென்னையில் உள்ள வியாசர்பாடியில் மழைநீரானது தாழ்வான பகுதியில் இருக்கும் குடியிருப்புக்களை நோக்கி சென்றுள்ளது. இதனால் அங்கு மழைநீர் வடிய முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் ராயபுரம், பாரிமுனை, காமராஜர் சாலை, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், போரூர், நந்தம்பாக்கம், விமானநிலையம் போன்ற இடங்களிலும் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதனை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சிவாஜி நகர், அஜீஸ் நகர் போன்ற பகுதியில் மழைநீரானது தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்துள்ளது.
இதனால் குடியிருப்பு வாசிகள் முதல் தளத்திற்கு சென்றுள்ளனர். முக்கியமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தாம்மாள் சாலையில் மழை நீரானது இடுப்பு அளவிற்கு தேங்கியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இரண்டு நாட்களாக அத்தியாவசிய பொருள்களை கூட வாங்க முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனை போன்றே கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்த மாவட்டம் முழுவதும் சராசரியாக நேற்று முன்தினம் 71.12 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை 8 மணி வரை 28.51 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அதிகபட்சமாக புவனகிரியில் 60 மில்லி மீட்டரும் சேத்தியாத்தோப்பில் 58 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது. இந்த பேரிடரினால் மாவட்டம் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும் ஏரியும் குளங்களும் நிரம்பியுள்ளது. அதிலும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை கடற்கரையில் முகப்பு வெட்டி அதில் வடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கவனத்துடன் மக்கள் செயல்பட வேண்டும் என்றும் தேவையின்றி வெளிவரக்கூடாது எனவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் தற்பொழுது கடலூர் மாவட்டத்தை ஆய்வு செய்யும் முடிவை செய்துவிட்டு தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு போன்ற முக்கிய அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இக்கூட்டத்தில் தமிழக மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.