உலக நாடுகள் எங்களை ஏற்றுக்கொள்ளவிடில் மோசமான சூழல் உருவாகும் என்று ஜபியுல்லா முஜாஹீத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்க நேட்டோ படைகள் தலீபான்களுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி மே மாத இறுதியில் இருந்து ஆப்கானில் இருக்கும் அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கினர். மேலும் 90% அமெரிக்கப் படைகள் ஜூலை மாத இறுதியில் ஆப்கானில் இருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி அமெரிக்கப் படைகள் நாட்டை விட்டு முற்றிலும் விலகி ஆப்கானிஸ்தான் நாடு தலீபான்கள் வசம் சென்றது. இதனை அடுத்து 20 ஆண்டு காலப் போரில் வெற்றி பெற்றதாக தலீபான்கள் அறிவித்தனர்.
மேலும் அவர்கள் ஜனநாயக ஆட்சியை அகற்றி விட்டு இடைக்கால அரசை நிறுவினர். ஆனால் தலீபான்களின் இடைக்கால அரசை பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகாரம் செய்யவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி உதவியையும் சர்வதேச பண நிதியம் அளித்து வந்த கடனுதவியையும் நிறுத்தின. இந்த நிலையில் தலீபான்கள் அரசை அங்கீகரிக்கம் செய்யப்படவில்லை எனில் பிராந்தியத்தின் அமைதி சீர்குலைவது மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரச்சினையை உருவாக்கும் என்று தலீபான்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹீத் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது “ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசை அங்கீகாரம் செய்யவில்லை எனில் பிராந்தியத்தின் அமைதி கெடும். மேலும் இது ஒரு சர்வதேச பிரச்சினையாக உருவெடுக்கும். குறிப்பாக தலீபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போருக்கு முக்கியமாக வழிவகுத்தது நல்ல உறவு இல்லாததே. எனவே ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இதனால் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடன் தங்கள் தூதரகத்தை புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் நல்ல உறவை பேண எண்ணுகிறோம். இருப்பினும் அமெரிக்கா பாகிஸ்தான் வாயிலாக ஆப்கானில் குண்டு வீச முடியாது. மேலும் எங்கள் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது. குறிப்பாக ஆட்சி நடத்தும் தலீபான்கள் அமைப்பை சர்வதேச நாடுகள் ஏற்க வேண்டும். இல்லையெனில் மோசமான விளைவுகள் உருவாகும். இதனால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.