தலீபான்களை புதிய அரசாங்கமாக ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அவர்கள் புதிய அரசாங்கத்தை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டினை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என்று மாற்றப்போவதாக தெரிவித்துள்ளனர். இதற்காக உலக நாடுகளிடம் தலீபான்களின் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தலீபான்கள் முறையாக அமைக்கப்பட்ட ஜனநாயகத்தை வலுக்கட்டயமாக கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர்கள் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதை கனடா ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் தலீபான்களின் அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாத குழு என்று கனடா சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது ஆப்கானில் இருந்து மக்களை வெளியேற்றுவதே எங்களின் முக்கிய நோக்கமாகும்” என்று கூறியுள்ளார்.